பாஜகவுடன் பதவிச்சண்டை முடிவுக்கு வராத நிலையில் மகாராஸ்டிராவில் விரைவில் சிவசேனா ஆட்சி அமைக்கும் என்றும் தங்களுக்கு 170 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் கூறியிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கூட்டணியின் 116 உறுப்பினர்களையும் தனது 54 உறுப்பினர்களையும் சேர்த்தே ராவத் இப்படி கூறியிருக்கிறார் என்பதால் பரபரப்பு அதிகரித்திருக்கிறது. இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், சஞ்சய் ராவத் தனக்கு அனுப்பிய மொபைல் செய்தியை வாசித்துக் காட்டினார். “வணக்கம். நான் சஞ்சய் ராவத். ஜெய் மகாராஸ்டிரா” என்று அந்தச் செய்தியில் சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.
சஞ்சய் ராவத்தை அழைத்துப் பேசப்போவதாக அஜித் பவார் கூறினார். தேர்தல் முடிவு வெளிவந்து 10 நாட்கள் ஆகியும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்றும் அமைச்சரவையில் பாதி இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. பாஜக ஒப்புக்கொள்ள மறுத்தால் மாற்று ஏற்பாடு செய்யப்போவதாகவும் அது எச்சரித்துள்ளது.
இந்த மோதல்களுக்கு இடையே தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி ஆலோசித்து வருகின்றன. விவசாயிகள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்க இந்தக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.