காப்பீடு பணத்திற்காக தங்கள் தத்தெடுத்து 11 வயது சிறுவனையே லண்டன் வாழ் இந்திய தம்பதி ஒன்று கொன்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட கவல் ரய்ஜடாவும், ஆர்த்தி திர் தம்பதியினர் லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு குஜராத்துக்கு வந்தபோது, குழந்தை தத்தெடுக்க விருப்பம் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர். இதனை பார்த்த கோபால் செனாஜி என்ற 11 வயது சிறுவனின் குடும்பத்தினர் அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோரை இழந்த கோபால் செனாஜி, மூத்த சகோதரியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். குடும்பம் வறுமையால் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தனது சகோதரனை தத்துக்கொடுத்துவிட்டால் அவன் நன்றாக வளருவான் என நினைத்துள்ளார் கோபால் செனாஜியின் சகோதரி. இதனையடுத்து சட்டப்படி கோபால் செனாஜியை தத்தெடுத்துள்ளார் லண்டன் தம்பதிகள். தத்தெடுத்த பின் லண்டன் சென்று சில ஆவணங்கள் தயார் செய்ய வேண்டியுள்ளதாக கூறி சிறுவனை குஜராத்திலேயே விட்டுவிட்டு இருவரும் லண்டன் பயணித்துள்ளனர்.
அங்கு சென்ற அந்த தம்பதி சிறுவன் பெயரில் 1.2 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்துள்ளனர். சிலநாட்கள் கழித்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கோபால் செனாஜி 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதைத் தடுக்க வந்த உறவினரும் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காப்பீடு பணம் கிடைக்கும் என்பதாலேயே, லண்டன் தம்பதியர் திட்டமிட்டு சிறுவனை கொலை செய்துள்ளனர் என தற்போது தெரிய வந்துள்ளது.