தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா (26), மாதாபூரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இரவு பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியங்கா, தனது சகோதரி பவ்யாவை செல்போன் மூலம் தொடர்புகொண்டுள்ளார். அப்போது தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், சிலர் உதவி செய்வதாக கூறி வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். அருகில் உள்ள கடைக்கு எடுத்து சென்று சரி செய்துகொள்கிறேன் என பிரியங்கா கூறியபோதிலும், சிலர் வாகனத்தை சரிசெய்ய எடுத்து சென்றதாக போனில் கூறியுள்ளார்.
தொடர்ந்து பவ்யாவிடம் பேசிய பிரியங்கா, "தயவுசெய்து என்னுடன் சிறிது நேரம் பேசு, அதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன். நான் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறேன். பயமாக உள்ளது. என்னை முறைத்து பார்க்கிறார்கள். மிகவும் பயமாக இருக்கிறது. நான் அழுவது போல் உணர்கிறேன். எனது பைக் திரும்பி வரும் வரை தயவுசெய்து பேசிக் கொண்டே இரு" என கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பிரியங்காவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண், எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண், பிரியங்காதான் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.