நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 23ஆம் தேதி 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நேற்று (08-08-24) மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். மக்களவையில் அறிமுகம் செய்யப்பட வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு, எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டத் திருத்த மசோதாவில் கடும் சர்ச்சைகள் இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து அங்கு அனுப்ப வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார். அதன்படி, மொத்தம் 31 பேர் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டு குழுவில் தற்போது மக்களவைக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்களின் பெயர் வெளியாகியிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவைத் தலைமைச் செயலருக்கு கிரண் ரிஜிஜூ அனுப்பிய அந்த கடித்ததில், பா.ஜ.கவின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவைப் பரிசீலிக்க மக்களவை கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 பேர் கொண்ட மக்களவைக் கூட்டுக் குழுவில், தி.மு.க எம்.பி ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, இம்ரான் மசூத், நிஷிகாந்த் துபே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஜெகதாம்பிகா பால் தலைமையிலான இந்த கூட்டுக் குழு, வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்கள் சரியா?, அதில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்பதையெல்லாம் முடிவு செய்து தங்களது பரிந்துரையை மக்களவையில் அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.