இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையாத சூழலில், ஆப்பிரிக்காவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்தியில் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயப் பயிர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது வெட்டுக்கிளிகள் கூட்டம் இதேபோன்ற ஒரு ஆபத்து மீண்டும் இந்தியாவுக்கு வரலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்களைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது. லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாயப் பயிர்களை நாசம் செய்தன. இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஏதும் பலனளிக்கவில்லை. ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 75% பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்தன.
இந்த வெட்டுக்கிளி கூட்டம் இந்தியாவைக் கடந்து பாகிஸ்தான் மற்றும் சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தின. இந்நிலையில் ராஜஸ்தானின் ஸ்ரீகங்கநகர் மற்றும் ஜெய்சால்மர் மாவட்டங்களில் மீண்டும் வெட்டுக்கிளிகள் தென்படத் துவங்கியுள்ளன. இது அப்பகுதி விவசாயிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உள்ளூர் வட்ட அலுவலகங்கள் மற்றும் வேளாண் துறை குழுக்கள், இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு அமைப்பு (எல்.சி.ஓ) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், மீண்டுமொரு மிகப்பெரிய வெட்டுக்கிளி கூட்டம் தென்கிழக்கு ஆசியாவை நோக்கி நகரத்து வருவதாகவும், விரைவில் இந்தக் கூட்டம் இந்தியா வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் இந்தியா வரும்பட்சத்தில் உணவுப்பொருள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) பிரச்சனையைச் சமாளிக்க சுமார் 120 மில்லியன் டாலர்களைத் திரட்டியுள்ளது.