ஹத்ராஸில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க ஊடகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அப்பெண்ணின் குடும்பத்தார் காவல்துறையினர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர்.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன.
இந்தச் சூழலில், உ.பி.யின் சிறப்புப் படை அக்குடும்பத்தாரிடம் விசாரணை செய்வதாகக் கூறி, இரண்டு தினங்களாக அவர்களைச் சந்திக்கப் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. தற்போது அவர்களை ஊடகத்தினர் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பெண்ணின் குடும்பத்தார் காவல்துறையினர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர்.
இது குறித்துப் பலியான பெண்ணின் தாயார் கூறும்போது, ‘போலீஸார் எரித்த உடல் யாருடையது என எங்களுக்குத் தெரியாது. எனவே, அவர்கள் அளித்த அஸ்தியை நாம் வாங்க மறுத்து விட்டோம். எங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை தேவை. அவர்களிடம் விசாரணைக்கு ஒத்துழைப்போம்.’ எனத் தெரிவித்தார். மேலும், பலியான பெண் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனக் காவல்துறை கூறியிருப்பது குறித்துப் பேசுகையில், என் மகளை நான் பார்க்கும் போது உடலில் துணியில்லாமல் இருந்தார் எனக் கூறியுள்ளார்.
பலியான பெண்ணின் அண்ணி கூறும்போது, ‘உங்கள் வீட்டுப் பெண் கரோனாவில் இறந்ததாகக் கருதுங்கள், அரசு இழப்பீடு ரூ.25 லட்சம் வங்கிக் கணக்கில் கிடைத்ததால் வாயை மூடிக்கொண்டு இருங்கள் என எஸ்.பி எங்களை மிரட்டினார். கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்ட உடலைப் பார்க்க விடாமல் தடுத்த மாவட்ட ஆட்சியர், உடற்கூறு பரிசோதனையால் உடல் சிதைக்கப்பட்டிருப்பதால், அதைப் பார்த்தால் 10 நாட்களுக்குத் தூக்கம் வராது என உடலைப் பார்க்க விடாமல் மிரட்டினார்" எனத் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் சகோதரர் ஊடகங்களிடம் பேசும்போது, "அன்று யாருடைய உடல் எரிக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அது எங்கள் சகோதரியின் உடலாக இருந்தால், அவர்கள் ஏன் அவரை இப்படி எரித்தார்கள்? பிரேதப் பரிசோதனை அறிக்கையை நாங்கள் கேட்டபோது, அது ஆங்கிலத்தில் இருக்கும், உங்களுக்கு படிக்கத் தெரியாது, உங்களுக்கு அது புரியாது என்று சொன்னார்கள். உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் வீட்டிற்குள் வந்து எங்கள் தொலைபேசியைக் காட்டச் சொல்லி அதனைச் சோதிப்பார்கள். கடந்த இரண்டு நாட்களில் வெளி உலகத்துடன் நாங்கள் கொண்டிருந்த ஒரே தொடர்பு இதுதான்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு நாட்களாக தங்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும், எல்லா நேரத்திலும் வீட்டில் தொடர்ந்து காவல்துறையினர் இருந்தனர் என்றும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்கள் இரண்டு நாட்களாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது ஊடகங்கள் மத்தியில் பெண்ணின் குடும்பத்தினர் வைக்கும் குற்றசாட்டுகள் பலரையும் அதிரவைத்துள்ளன.