அசாம் மாநிலத்தில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
அசாமில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் சூழலில், தெற்கு அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். பராக் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள கரிம்கஞ்ச், ஹைலகண்டி மற்றும் கச்சார் ஆகிய மூன்று மாவட்டங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கச்சாரில் 7 பேரும், ஹைலகண்டியில் 7 பேரும், கரிம்கஞ்சில் 6 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். ஏற்கனவே அம்மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக சுமார் மூன்று லட்சம் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்துவரும் சூழலில், நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நிலச்சரிவுகளை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.