இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சம்பவங்களும், அடக்குமுறைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் வெடித்த ஹிஜாப் பிரச்சனை, நாட்டையே பதற்றத்துக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று வகுப்பிலிருந்த மாணவர்களுக்கு பேராசிரியர் ஒருவர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அதே வகுப்பில் இருந்த இஸ்லாமிய மாணவன், அந்தப் பேராசிரியரிடம் பாடம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் விரக்தியடைந்த பேராசிரியர், அந்த இஸ்லாமிய மாணவனை நவ.26 மும்பை தாக்குதல் தீவிரவாதியான கசாப் என்பவரின் பெயரை வைத்து தீவிரவாதி என அழைத்துள்ளார். பேராசிரியர் பேச்சால் கோபமடைந்த இஸ்லாமிய மாணவர், ''நீங்கள் என்னை எப்படி தீவிரவாதி எனக் குறிப்பிட்டு பேசலாம். இந்த நாட்டில் முஸ்லிமாக இருப்பவர்கள், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற வேதனையை அனுபவித்து வருகின்றனர். இது வேடிக்கை அல்ல. என்னுடைய மதத்தை கேலி செய்ய கூடாது. இதுவொரு வகுப்பறை. நீங்கள் என்னை அப்படி அழைக்க முடியாது'' எனப் பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைக் கேட்ட ஆசிரியர் ''நீ என்னுடைய மகன் மாதிரி. நான் விளையாட்டுக்குத் தான் அப்படி சொன்னேன். என்னை மன்னிச்சிடுங்க'' என்று அந்த மாணவனை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது ''உங்கள் மகனிடம் இப்படிப் பேசுவீர்களா, உங்கள் மகனை தீவிரவாதி என்ற பெயரால் நீங்கள் அழைப்பீர்களா? எனக் கேட்டதற்கு, “என் மகனை தீவிரவாதி என்று அழைக்கமாட்டேன்” என ஒப்புக்கொண்டார்.
இந்தச் சம்பவம் முழுவதையும், அதே வகுப்பில் இருந்த மற்றொரு மாணவன், தனது செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்தக் காட்சிகள் வைரலானதை அடுத்து, பேராசிரியரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
வகுப்பறையில் வைத்து, இஸ்லாமிய மாணவனை தீவிரவாதி என அழைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.