இந்தியர்கள் பலர் தங்கள் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவிவருகிறது. கடந்த சில வருடங்களாக தங்கள் நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து இந்தியாவிற்கு வழங்கிவருகிறது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்து தேசிய வங்கி, வருடாந்திர கணக்கு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 706 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 13 வருடங்களில் இந்தியர்களின் முதலீடு இந்தளவிற்கு அதிகரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதற்கு முந்தைய ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு, இந்திய மதிப்பில் ரூ. 6,625 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பங்கு பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றில் இந்தியர்கள் செய்த முதலீட்டின் மதிப்பு உயர்ந்ததால், முதலீடும் உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செலுத்தியுள்ள பணம் குறைந்துவருவது குறிப்பிடதக்கது. இந்தப் புள்ளிவிவரங்களில் கருப்பு பணம் பற்றி எந்த தகவல்களும் இல்லையென்பது குறிப்பிடதக்கது.