அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்படும் கிணறு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் இரண்டு தீயணைப்பு வீரர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்படும் கிணறு ஒன்றில் கடந்த 14 நாட்களாகக் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று இந்தக் கிணற்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். இந்த நிலையில், காணாமல்போன ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு தீயணைப்பு வீரர்களின் உடல் எண்ணெய் கிணறு தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தை சுற்றி 50 மீட்டர் சுற்றளவில் தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எண்ணெய் கிணறு தொடர்ந்து எரிவாயுவை வெளியேற்றி வருவதால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் பிரதமர் நரேந்திர மோடியுடன் அப்பகுதியின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து பேசிய சர்பானந்தா சோனோவால், "தீ இப்போது 50 மீட்டர் பரப்பளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த 25-28 நாட்கள் தேவை என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். அந்தப் பகுதியிலிருந்து மக்களை வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளோம். பிரதமர் மோடி மாநிலத்திற்கு தேவையான முழு உதவியையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்," எனத் தெரிவித்தார்.