கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 86 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அம்மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வெளியிட்டார். அதன்படி, கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 12- வது முறையாக போட்டியிடுகிறார். இவர் கடந்த 1970- ஆம் ஆண்டு முதல் 11 முறை புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
அதேபோல், ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதியில் ரமேஷ் சென்னிதலா, கொல்லம் சட்டமன்றத் தொகுதியில் பிந்து கிருஷ்ணா, நேமம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதரன், செங்கண்ணூர் சட்டமன்றத் தொகுதியில் முரளி, ஆலப்புழா சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் கே.எஸ்.மனோஜ், எர்ணாகுளம் சட்டமன்றத் தொகுதியில் வினோத், திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதியில் வி.எஸ்.சிவக்குமார், கோவளம் சட்டமன்றத் தொகுதியில் வின்சென்ட் உள்ளிட்ட 86 பேர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.
கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆளும் கட்சியைப் பின்னுக்கு தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.