
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளாதது; ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது; அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் உடனான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாமல் மௌனம் காத்தது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுற்றிச் சுழன்று வருகிறது எடப்பாடி- செங்கோட்டையன் இடையேயான பனிப்போர்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் யூடியூப் சேனல் நடத்திய விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டார். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அனைவராலும் உணர முடியும். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானை போல என்னால் பேச இயலாது. அவர் ஒரு கட்சியின் தலைவர் எதை வேண்டுமானாலும் அவர் மனதில் இருக்கும் கருத்தை பேசலாம். கேட்க இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் அளந்து பேச வேண்டி இருக்கிறது. இக்கட்டான சூழ்நிலை. ஒரு வார்த்தையை தவறிவிட்டால் என்ன வரப்போகிறது என்று வெளியே உள்ள தொலைக்காட்சிகள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். இன்று இரண்டு கேள்விகள் கேட்டார்கள். நீங்கள் சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் எப்படி அவரை சந்தித்தீர்கள்? என கேட்டார்கள். நான் அப்போது சொன்னேன் 'அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் உள்ளே சென்றோம். நான் மட்டும் செல்லவில்லை. எனக்கு இன்றைக்கு தேவை இருந்தது. என்னுடைய பகுதியில் இருக்கக்கூடிய மக்களுடைய நலன் கருதி இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகள் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய அளவிற்கு ஒரு சாயப்பட்டறை கொண்டு வருகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்று என்னிடத்தில் ஒரு 200 பேர் மனுக்களை தந்தார்கள். அந்த மனுவை பெற்றுக் கொண்டு சபாநாயகர் இடத்தில் சென்று ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுக்க சென்றேன்' என சொன்னேன். அது பெரிய செய்தியாக போய்க்கொண்டிருக்கிறது. செங்கோட்டையன் எப்படி சபாநாயகரை சந்தித்தார் என பேசுகிறார்கள்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகரை சந்திப்பது ஒரு எதார்த்தமான நிலை. கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் அவரிடத்தில் அனுமதிபெற வேண்டும். ஆனால் அவையெல்லாம் ஒரு விமர்சனமாக இருந்து கொண்டிருக்கின்ற நிலையில் நான் இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் நான் அதிமுக தொண்டனாக இருக்கிறேன். நான் தலைவன் அல்ல. என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு தெரியும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரு வரி கூட தவறாக நான் பேசியதே இல்லை. முகம் சுளிக்கும் அளவிற்கு நான் வார்த்தைகளை அள்ளி வீசியதில்லை. சில பேர் கேட்பார்கள் கடுமையான வார்த்தையை நீ ஏன் பேசவில்லை என்பார்கள். அதற்கு தனியாக இரண்டு பேர் இருக்கிறார்கள் என்று சொல்வேன். எம்ஜிஆரும் தேச பக்தி உள்ளவர். ஜெயலலிதாவும் தேசிய பக்தி உள்ளவராக இருந்தார். தேசம் ஒருமைப்பாடோடு வாழ வேண்டும். தேசத்தில் இருக்கின்ற அனைவரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதுதான் நமது தலையாய நோக்கமாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. ஏனென்றால் எந்த பாதை சரியாக இருக்கிறதோ அந்த பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது; என் பாதை தெளிவானது; வெற்றி முடிவானது. மகாகவியின் வார்த்தையைப் போல 'சில வேடிக்கை மனிதர்களை போல நான் வீழ்ந்துவிட மாட்டேன்' என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.