
மெட்ராஸ் பார் கவுன்சில் அசோசியேஷன் 160 ஆவது ஆண்டு விழா மற்றும் இந்திய அரசியலமைப்பின் 75 ஆவது ஏற்பு விழா சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய முதல்வர், '' நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள் உரையாற்றும் பொழுது ஒரு இக்கட்டான நிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். ஒரு நீதியரசர் தமிழிலே பேசுவார் என்று நினைத்தோம் அவர் ஆங்கிலத்தில் பேசினார். ஒரு நிதியரசர் ஆங்கிலத்தில் பேசுவார் என நினைத்தோம். ஆனால் தமிழில் பேசினார். இதுதான் இரு மொழி கொள்கை. இது தமிழ்நாடு இக்கட்டான நிலை எல்லாம் உங்களுக்கு கிடையாது. நல்ல நிலை தான் இது.
நேற்று நிதிநிலை அறிக்கை நாம் தாக்கல் செய்தோம். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துவிட்டு இன்று நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் பொறுப்பேற்ற பிறகு அவருடன் நான் கலந்து கொள்ளக்கூடிய முதல் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. அதனால் நான் பெருமை அடைகிறேன். தமிழ்நாட்டில் இருந்து சென்று இந்திய அளவில் நீதித் துறைக்கு பல விதங்களில் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கக் கூடிய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி விஸ்வநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே சிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம்.
வழக்கறிஞர் சங்கங்கள் சமூக நீதியை வளர்த்து வருகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது.அரசியல் மெருகூட்டும் தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை வழங்கியுள்ளது'' என்றார்.