
புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தாக்குதல் நடந்த நன்று பிரதமர் மோடி போட்டோஷூட் நடத்திக்கொண்டிருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் இயங்கி வரும் 'தி டெலிகிராப்' என்ற பத்திரிக்கை மோடியின் விமர்சித்து தனது முதல் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'ஆன்டி இந்தியர்களே உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்காக பிரதமர் வருத்தப்படவில்லை என நீங்கள் எவ்வாறு கூறலாம். பிப்ரவரி 14 முதல் தினமும் பிரதமர் மோடி கருப்பு நிறமுள்ள உடைகளையே அணிந்து வருகிறார்' என அச்சிட்டு அதற்கு கீழே பிரதமர் மோடி, அதன் பின் பங்கேற்ற விழாக்களில் சிரித்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 15 ஆம் தேதி பிரதமர் அதிவேக ரயிலை தொடங்கி வைத்த விழாவிலிருந்து, கொரியாவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் வரை பிரதமர் மோடி சிரித்தவாறு இருக்கும் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த செய்தியை சிறப்பு கட்டுரையாகவும் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை. டெலிகிராப் பத்திரிகையின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த விவகாரத்தில் அந்த பத்திரிகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் சமூகவலைதளங்களில் எழுந்து வருகின்றன.