இந்தியாவில் கரோனா பரவல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா இரண்டாவது அலையை நோக்கி செல்வதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 53,476 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் 6ஆம் தேதிக்குப் பிறகு முதன்முதலாக, ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே அதிகம் பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலமான மஹாராஷ்ட்ராவில், இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று (24.03.2021) ஒரேநாளில் 31, 855 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. பஞ்சாபில் கடந்த 24 மணிநேரத்தில் 2,613 பேருக்கு கரோனா தோற்று உறுதியாகிவுள்ளது. இது அந்த மாநிலத்தில், ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும்.
மேலும் மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில், கடந்த 24மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உறுதிசெய்யப்பட்டோரில் 80.63 சதவீதம் பேர், இந்த ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.