
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச்செயலாளர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச்செயலாளர்களில் ஒருவராக பி.பி.மாதவன் பணியாற்றிவருகிறார். அவருக்கு வயது 71. இவர் மீது டெல்லியில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும், மாதவன் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதை வெளியில் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பி.பி.மாதவன் மீது பலாத்காரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் டெல்லி உத்தம்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இளம்பெண் அளித்துள்ள இந்தப் புகார் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் விளக்கம் அளித்த பி.பி.மாதவன், இது காங்கிரஸ் கட்சியின் புகழைக் கெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார்.