கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 2-ம் இடத்தைப் பிடித்தவர், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மருத்துவர் ரேணு ராஜ். தற்போது தேவி குளம் பகுதியில் உதவி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எல்லைக்கு அருகில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் அருகில் தேவிகுளம் என்ற சிறிய மலைப்பகுதி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதிகளில், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மீது எடுத்துவந்த நடவடிக்கையே, தற்போது அவரது டிரான்ஸ்ஃபருக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 10 மாதத்திற்கு முன்புதான், தேவிகுளத்தின் உதவி கலெக்டராக ரேணு ராஜ் பதவியேற்றார். அப்போது முதல் அங்கு விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்துவந்தார். 90க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக்களை அவர் அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இவரின் நடவடிக்கையை கேரள உயர்நீதிமன்றம் பாராட்டி வந்த நிலையில், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை இவர் சம்மாதித்தார். தற்போது அதுதான் விஸ்வரூபமாக உருவெடுத்து, அவர் டிரான்ஸ்ஃபர் ஆக காரணமாக மாறியது.

தேவிகுளம் மற்றும் மூணாறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உதவி ஆட்சியர்கள் 16 பேர், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர். இதில் தற்போது ரேணு ராஜூவும் அதில் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.