பீகாரில் இருந்து கேரளாவிற்கு புலம்பெயர்ந்து, பெற்றோருடன் வசித்து வந்த 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பீகாரைச் சேர்ந்த அசாஃபக் அலாம் என்பவர் கேரளாவின் கொச்சி மாவட்டம் ஆலுவா பகுதியில் உள்ள மோகத் பிளாசாவில் அறை எடுத்து தங்கி உள்ளார். அப்பொழுது பீகாரைச் சேர்ந்த மற்றொரு புலம்பெயர் தொழிலாளர் தம்பதியின் ஐந்து வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான். கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததும், அவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த அந்த சிறுமி படித்து வந்த பள்ளியில் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்பொழுது அச்சிறுமியின் ஆசிரியைகள், சக தோழி சிறுமிகள், சிறுவர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். சிறுமியின் உடல் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அப்பொழுது அச்சிறுமியுடன் படித்த நெருங்கிய தோழியான சக சிறுமி ஒருவர் கரடி பொம்மையைக் கடைசி பரிசாக சிறுமியின் சவப்பெட்டியில் கண்ணீர் மல்க வைத்தார். இது அங்கிருந்தவர்களை மேலும் துயரத்திற்குக் கொண்டு சென்றது. இறுதிச் சடங்கில் பங்கு பெற்றவர்கள் அந்தச் சிறுமிக்கு ஆறுதல் கூறித் தேற்றினர்.
கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அசாஃபக் அலாம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 30 நாட்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து 26 நாட்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு 110 நாளான இன்று அசாஃபக் அலாமுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.