கரோனா பாதிப்புக்கு மருந்து கண்டறிய பிளாஸ்மா தெரபியைப் பயன்படுத்தக் கேரளா முடிவு செய்து, அதற்கான அனுமதியையும் ஐ.சி.எம்.ஆரிடம் பெற்றுள்ளது.

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000 ஐ கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சையளிக்க மருத்துவப் பணியாளர்கள் இரவுபகலாக உழைத்து வருகின்றனர்.இந்நிலையில் கரோனா பாதிப்புக்கு மருந்து கண்டறிய பிளாஸ்மா தெரபியைப் பயன்படுத்தக் கேரளா முடிவு செய்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா மாதிரிகளை எடுத்து, அதிலிருந்து கரோனா எதிர்ப்பு ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து சிகிச்சைக்குப் பயன்படுத்துவதே இதன் நோக்கம்.

கரோனாவிலிருந்து குணமான ஒருவரின் உடலில், கரோனா எதிர்ப்பு ஆன்டிபாடிகள் இருக்கும்.அவற்றை அடையாளம் கண்டு,பிரித்தெடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுத்து சிகிச்சையளிப்பதே கேரளாவின் திட்டம்.இந்த முறையைப் பயன்படுத்தி அமெரிக்கா,சீனா,தென்கொரியா ஆகிய நாடுகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில்,இந்தியாவில் இந்த முறையைச் சோதனை செய்யக் கேரளா முடிவெடுத்துள்ளது.
கேரள அரசின் இந்தத் திட்டத்திற்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, கர்நாடகாவுக்கு இதுதொடர்பாக திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.