கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை குமாரசாமியின் ராஜினாமா கடிதத்தை ஏற்கப்பட்டதாக அறிவித்தது. இந்நிலையில் பாஜக கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களுருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக, அம்மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து எடியூரப்பா டெல்லி பாஜக தலைமையுடன் ஆலோசனை செய்து வந்த நிலையில், எடியூரப்பாவிற்கு கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா, ஆட்சி அமைக்க வருமாறு இன்று காலை அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பாஜக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்த எடியூரப்பா, பாஜக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 06.30 மணியளவில் கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.
பெங்களுருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் வாஜுபாய் வாலா எடியூரப்பாவிற்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை செய்து வைத்தார். இந்த விழாவில் பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
முதல்வராக பதவியேற்பதற்கு முன்பே முன்னாள் முதல்வர் குமாரசாமி ஜூலை மாதம் கையெழுத்திட்ட கோப்புகளின் உத்தரவுகளை நிறுத்தி வைக்குமாறு எடியூரப்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஜூலை 31 க்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க முதல்வர் எடியூரப்பாவிற்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.