பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் பூதாகரமாகி நிற்கிறது. இந்நிலையில், உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்ஃபோன் எண்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா, இந்த சதிக்குப் பின்னால் இருப்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என்றும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ''அனைத்து தரப்பினரையும் உளவு பார்க்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஃபேல் தொடர்பான விசாரணையைத் தடுக்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுக்கேட்புக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனது செல்ஃபோன்களையும் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்டுள்ளனர். ஊழலுக்குப் பிரதமர் மோடியே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.