Skip to main content

ஜி20 பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

g 20 representative meeting held in puducherry 

 

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால் ஜி20 உறுப்பு நாடுகளின் உச்சி மாநாடு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க இந்தியா முழுவதும் 200 நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்களும் நடைபெறுகிறது. அதன்படி புதுச்சேரியில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி20 பிரதிநிதிகள் மாநாடு நேற்று தொடங்கியது.

 

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல்20 மாநாடு புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் அரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அஷிதோஷ் சர்மா தலைமை தாங்கினார். இந்திய அறிவியல் கழக இயக்குனர் ரங்கராஜன் வரவேற்றார். இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, துருக்கி, சுவீடன், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

மாநாட்டில் மாற்று எரிசக்தி, உலகளாவிய சுகாதார வசதிகள், அறிவியலுடன் சமுதாயம் கலாச்சாரத்தை இணைப்பதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவில் ஜி20 மாநாட்டில் 'அறிவியல் 20' தலைமை பொறுப்பு அதிகாரி அசுதோஷ் ஷர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அறிவியல் அனைவருக்குமானது. அறிவியலில் இருந்து யாரும் ஒதுங்க வேண்டியதில்லை. ஜி20 இல் அறிவியல் 20 என்பது உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு ஆற்றல் சமபங்கு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு போன்ற உலகளாவிய பிரச்சனைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்குவதற்கும், அறிவியலை சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதற்குமான ஒரு தளமாகும். அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் புதுமையான நடைமுறைகள் மூலம் மட்டுமே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க புதுமையான சிந்தனைகள் உருவாக வேண்டும். எங்கள் ஈடுபாடுகள் கொள்கை கட்டமைப்புகளுடன் வெளிவர வேண்டும். ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கு மிகவும் பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றலாம். அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டியது மிக அவசியம்.

 

மேலும் அறிவியல் 20 என்பது நிலையான வளர்ச்சிக்கான ஜி20 நாடுகளின் முன் முயற்சியே ஆகும். உறுப்பு நாடுகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அறிவியல் உலகில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து அறிக்கை வெளியிடுவோம். மொத்தம் 5 கூட்டங்கள் நிறைவுக்கு பிறகு, ஜூலை மாதத்திற்குப் பிறகு நாடுகளுக்கு பொருத்தமான சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கான கொள்கை வகுப்பாளர்களுக்கு எஸ்20 குழு தனது அறிக்கையை வெளியிடும்"  என்று குறிப்பிட்டார்.

 

மாநாட்டிற்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் மாநாடு நடைபெறும் இடம் மற்றும் மாநாட்டு பிரதிநிதிகள் தங்கி உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சென்னை தேசிய பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்த 20 வீரர்கள் மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள உயர்ந்த கட்டிடங்களின் மீது இருந்து அதிநவீன தொலைநோக்கி மற்றும் துல்லியமாக சுடும் அதி நவீன துப்பாக்கி, வயர்லெஸ் உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்