கர்நாடக மாநிலத்தை அதிரவைத்துள்ள கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா வனப்பகுதியில் காதலர்கள் இருவர் கடந்த 24 ஆம் தேதி தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலர்களை கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காதலன் அந்த இடத்திலேயே அந்த கும்பலை சேர்ந்த இளைஞர்களைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனையடுத்து காதலனை கல்லால் தலையில் தாக்கிய அந்தக் கும்பல் காதலியை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டுச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தனர். சிறிதுநேரத்தில் மயக்கம் தெளிந்த நிலையில் காதலனை சுற்றி நின்றிருந்த அந்த கும்பலைச் சேர்ந்த நான்குபேர் தங்களுக்கு உடனடியாக நான்கு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என காதலனை மிரட்டியுள்ளனர். காதலியை முதலில் காட்டுங்கள் என காதலன் முறையிட்டதையடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இரத்த காயங்களுடன் 22 வயதுடைய காதலியை கொண்டுவந்து நிறுத்தினர். அந்த நேரத்தில் அந்த வழியாக திடீரென பொதுமக்கள் வரும் சத்தத்தைக் கேட்ட அந்த கும்பல் இருவரையும் விட்டுவிட்டு ஓடினர். பொதுமக்களின் உதவியுடன் காதலன்-காதலி இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி மும்பையை சேர்ந்தவர் என்பதும், படிப்பதற்காக கர்நாடக மாநிலம் மைசூருக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கூடுதல் டி.ஜி.பி பிரதாப் ரெட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவத்தில் வேற்று மாநிலத்தவர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அதுதொடர்பாக விசாரிக்க ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு கர்நாடகாவின் தனிப்படை விரைந்தது. அதேபோல் ஒரு தனிப்படை கேரளாவிற்கும் விரைந்தது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி பகுதியில் உள்ள சூசையபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த பூபதி என்ற நபரை முதலாவதாக போலீசார் கைது செய்தனர். தொலைபேசி எண் சிக்னல் அடிப்படையில் பூபதியை மைசூரு போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதனையடுத்து ஈரோடு, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 4 கூலித்தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் 17 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது. மேலும் ஒரு நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
விசாரணையில் இந்த கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் மைசூரு சென்று இளம்பெண்கள் மற்றும் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு சத்தியமங்கலம் திரும்பும் வழியில் உள்ள சாமுண்டி மலை லலிதாதிரிபுரா பகுதியில் கூட்டாக மதுபானம் அருந்திவிட்டு சாலையில் வருபவர்களிடம் கூச்சலிடுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவை உலுக்கிய இந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.