மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களது ஆட்சியைக் கலைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. மேலும், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையைக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தருவதாகப் பேரம் பேசி வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகினார். இன்று காலை பிரதமர் மோடியைச் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தைச் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதன் காரணமாக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் சுக்லா மற்றும் சஞ்சீவ் குஷ்வா ஆகிய இருவரும் மத்தியப்பிரதேச பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.