நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இத்தகைய சூழலில் பெங்களூருவைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டரும், பெயிண்டர் வேலை செய்பவருமான சாமுவேல் என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘நேற்று முன்தினம் (03.04.2024) தன்னை கடத்தி பா.ஜ.க.வில் சேரும்படி பா.ஜ.க. எம்.எல்.ஏ. முனிரத்னா, அவரது உதவியாளர்கள் சுரேஷ், வசந்த், வாசிம் உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்தனர்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது அலுவலகத்தில் இரண்டு நாட்கள் பூட்டி வைத்தாதகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த புகாரின் பேரில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான முனிரத்னா மீதும், அவரது உதவியாளர்கள் சுரேஷ், வசந்த், வாசிம் உள்ளிட்டோர் மீதும் குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 363 (ஆள் கடத்தல்), 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், ‘தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என முனிரத்னா கருத்து தெரிவித்துள்ளார்.