கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (13.09.2021) தொடங்கியுள்ளது. பசவராஜ் பொம்மை முதல்வரான பிறகு கூடவுள்ள இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்றுமுதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்ப தயாராகியுள்ளன.
இந்தநிலையில் சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸைச் சேர்ந்த சித்தராமையாவும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாரும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சட்டமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்து எரிபொருள் மற்றும் எல்எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, "எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸைக் குறைகூறுவது சாக்கு போக்கானது. ஒன்றரை லட்சம் கோடி கடன் இருந்தது. இன்று மத்திய அரசு கலால் வரி மூலம் 24 லட்சம் கோடி வசூலித்துள்ளது. ஒன்றரை லட்சம் கோடி எங்குள்ளது? 24 லட்சம் கோடி எங்குள்ளது?" என கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து தங்கள் கட்சியில் இணைய பாஜக பணம் தர முன்வந்ததாக காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு தாவிய எம்.எல்.ஏ. ஒருவர் கூறியது பற்றி பேசிய சித்தராமையா, "காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களுக்கு பாஜக பணம் வழங்கியது. ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் பாஜக 25 - 35 கோடி வரை அளித்தது" என தெரிவித்தார்.
ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடத்திய பாஜக - ஒப்புதல் வாக்குமூலம் அளித்த கட்சி எம்.எல்.ஏ!