இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. பிரதமர் மோடியின் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்க இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (09.06.2024) இரவு 07:15 மணிக்குப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அப்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடி மற்றும் அமைச்சர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில் குடியசுத் தலைவர் மாளிகை முன்பு பதவியேற்பு விழா நடைபெற உள்ள மேடைகள் அலங்கரிக்கும் பணிகள் மற்றும் ஒலி மற்றும் ஒளி அமைக்கும் பணியின் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் பதவியேற்பு விழா நடைபெறும் இடத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள், தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ள இரண்டு விருந்தினர்கள், மோடியுடன் அவரது தாயார் ஹீராபென் இருக்கும் படத்தைத் துணியில் அச்சிட்டுள்ளதைக் காட்சிப்படுத்துவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளர்களும் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான அனில்குமார் சிங் இது குறித்துக் கூறுகையில், “பிரதமரைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்தார்.