இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மக்களுக்கு முழு அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்து, இந்தியாவில் பயன்படுத்த தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளில் அனுமதி வழங்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு, உள்நாட்டுப் பரிசோதனையின்றி இந்தியாவில் அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனடிப்படையில் அமெரிக்காவில் ஏற்கனவே ஒப்புதல் பெற்றிருந்த மாடர்னா தடுப்பூசிக்கு, இந்தியாவில் சோதனை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசியை விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பிற நாடுகளில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கான உள்நாட்டுச் சோதனைகளை இந்தியா நீக்கியுள்ளதால், இந்தியாவில் தங்களது ஒற்றை டோஸ் தடுப்பூசியை பரிசோதிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஜான்சன்&ஜான்சன், இந்தியாவிற்கு தடுப்பூசியை விரைவாக வழங்குவதற்கான வழிகளைக் கண்டறிய இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.