ஜியோ அறிமுகமானதிலிருந்து தொலைத்தொடர்பு சேவைகளில் அடுத்தடுத்து அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமாக ஜியோ, தன் வாடிக்கையாளர்களை புது புது சலுகைகளைக் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அதன் அடுத்தகட்ட நகர்வாக ஜியோ நிறுவனம் ஜிகா ஃபைபர் (GigaFiber) என்னும் பிராட் பாண்ட் சேவையில் இறங்கியிருக்கிறது. இதன் அறிமுகத் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அதற்கான நடவடிக்கைகளில் ஜியோ இறங்கிவிட்டது. இதுவரை மொபைல்களிலும் மோடங்களிலும் மட்டுமே தன் இணையதள சேவையை வழங்கிவந்தது. இனி ஜியோ இணையதள சேவையை ஜிகா ஃபைபர் மூலமாகவும் உபயோகிக்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
இதை வீடுகளிலும் அலுவலகங்களிலும் உபயோகிக்கலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது . இதன் இணைய சேவையின் வேகம் 1 ஜிபிபிஎஸ் (1GBps) அளவிற்கு இருக்கும் என்றும் அறிவித்திருந்தது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக நேற்று அந்நிறுவனம் நாட்டின் பெரிய டிஜிட்டல் கேபிள் டிவி விநியோக நிறுவனமான டி.இ.என் நெட்வர்க் (D.E.N network) நிறுவனத்தின் 66% பங்குகளை 22.5 பில்லியன் ரூபாய்க்கு வாங்கப்போவதாகவும் மற்றும் ஹாத்வே (Hathway) எனும் பிராட்பேண்ட் சேவை வழங்கிவரும் நிறுவனத்தின் 51% பங்குகளை 29.5 பில்லியன் ரூபாய்க்கு வாங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜிகா ஃபைபர் சேவையில் அதிரடியான வேகம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.