ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத்தேர்தல் - இடதுசாரி மாணவர்கள் அமோக வெற்றி!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் ஐக்கிய இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. படுதோல்வி அடைந்து சரிவைச் சந்தித்துள்ளது. இதன்மூலம், மாணவர் சங்கத்திற்கான முக்கியமான நான்கு பொறுப்புகளை இடதுசாரி மாணவர் அமைப்பு மீண்டும் தக்கவைத்துள்ளது.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட இடதுசாரி மாணவ அமைப்பைச் சேர்ந்த கீதா குமாரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த நிதி திருபாதியை விட 464 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
துணைத்தலைவராக சிமோனி ஜோயா கான், பொதுச்செயலாளராக துக்கிராலா ஸ்ரீகிருஷா மற்றும் இணை செயலாளராக சுபான்சு சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்மூவரும் இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
வெற்றிபெற்ற பின் கீதா குமாரி, ‘ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினரின் சர்வாதிகார நிலைப்பாட்டை அறிந்து மாணவர்கள் இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கு வாக்களித்துள்ளனர்’ என பேசியுள்ளார்.
- ச.ப.மதிவாணன்