'நாளை (23/01/2025) முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது' என நேற்று (22/01/2025) எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், 'நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!' என குறிப்பிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவைக் குறிப்பிட்டிருந்தார்.
அதில், 'இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக' எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 'இரும்பின் தொன்மை' என்ற நூலை வெளியிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அவரது உரையில், ''முன் தோன்றிய மூத்த குடி என்று வெற்று பெருமை பேசுவதாக சிலர் விமர்சித்தனர். ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக சொல்லி இருந்தேன். பலரும் என்ன அறிவிப்பு என கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வரும்வரை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். தமிழர்களுடைய தொன்மையை உலகத்திற்கு சொல்லும் வகையில் நான் இப்பொழுது அறிவிக்க போகிறேன். இங்கே கூடி இருப்பவர்களும், நேரலையில் இந்த இந்த விழாவை பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கவனமாக கேளுங்கள்.
தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே சொல்கிறேன் தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்த மாபெரும் மானுட புவியியல் பிரகடனத்தை இங்கு அறிவிக்கிறேன். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பட்ட கால கணக்கீடுகளிலிருந்து இரும்பு அறிமுகமான கி.மு 4,200 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சென்றுள்ளது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகமாகி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பூனே நகரில் உள்ள அகழ்வாய்வு நிறுவனம், அகமதாபாத்தில் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனம் அமெரிக்க நாட்டின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி பல ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்து ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட முடிவுகள் கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளது. இப்போது கிடைத்துள்ள கதிரியக்க கால கணக்கீடுகள் மூலம் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என தெரிய வருகிறது. பழம்பெருமைகளை பேசுவது புதிய சாதனைகளை படைக்க ஊக்கமளிக்கும் ''என்றார்.