பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதேநேரம் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். சீமானின் பெரியார் குறித்த கருத்துக்களுக்கு ஜான் பாண்டியன் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய சேகர்பாபு, ''இவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து புறம் தள்ளப்பட்டவர்கள். அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக வாழும் மனிதராக, சமுதாயத்தின் பகுத்தறிவு விடிவெள்ளியாக, நூற்றாண்டுக்கு மேலாக தமிழக மண்ணில் வேரூன்றிய பெரியாரை அழிப்பதற்கு இனி ஒருவர் பிறந்து உருவெடுத்து வந்தால் தான் முடியும். இது திராவிட மண். சித்தாந்தங்கள் பல இருந்தாலும் பெரியாருடைய பகுத்தறிவு கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக இப்படி கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுடைய பணி. எங்களுடைய பணி சூரிய உதயத்திற்கு முன்பு மக்களை சந்திப்பது; மக்களுடைய பயன்பாட்டிற்கு, மக்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கு தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்வது எங்களுடைய பணி. அவர்களுடைய பணி அவரவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க வசவாளர்கள்'' என்றார்.