சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில், நக்சலைட்டுகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். அதே சமயத்தில் பாதுகாப்பு படையினர் சிலரையும், நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு தலைவர் தனது மனைவியுடன் எடுத்த செல்பியால் பாதுகாப்பு படையினரால் பலியானார். கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தில் 13 பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகளின் தாக்குதலால் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை முதன்மையாக இருந்து நடத்திய நக்சலைட்டு தலைவரான சலபதி, கடந்த 2011ஆம் ஆண்டு காந்தமால் மாவட்டத்தில் மற்றொரு போலீஸ் ஆயுத கிடங்கை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் மேற்கொண்ட முயற்சியை போலீசார் முறியடித்தனர்.
காடுகளில் பதுங்கியிருந்த காலக்கட்டத்தில் ஆந்திரா-ஒடிசா சிறப்பு மண்டல குழுவின் துணை கமாண்டர் அருணா என்ற சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட சலபதி, அதன் பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாமல் போனார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் ஆந்திராவில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பின் சம்பவ இடத்தில் ஸ்மார்ட் போன் ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
அந்த போனை பரிசோதித்து பார்த்த போது, அதில் சலபதி தனது மனைவியுடன் செல்பி எடுத்த புகைப்படம் ஒன்று இருந்தது. அந்த புகைப்படத்தை வைத்து, சலபதி இருப்பிடத்தை கண்டறிய போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையில், சலபதியின் தலைக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சத்தீஸ்கர் - ஒடிசா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கரியாபந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர், கடந்த 19ஆம் தேதி முதல் அந்த வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் முதல் நக்சலைட்டுகளுக்கும், சத்தீஸ்கர்-ஒடிசா மாநில பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில், 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு தலைவர் சலபதியும் கொல்லப்பட்டார்.