கணவனே மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் காதலனால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பெண்ணின் உடல் பாகங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல இன்னொரு சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.
முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி என்பவர் மனைவி மாதவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருந்தார். இந்நிலையில் மாதவிக்கும் குருமூர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் சண்டையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி மாதவி திடீரென காணாமல் போனதால் மாதவியின் வீட்டார் பல இடங்களில் தேடி வந்தனர்.
காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குருமூர்த்தியின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் மாதவியை கொன்று அவரை துண்டு துண்டாக வெட்டி அதனைக் குக்கரில் வேகவைத்து எடுத்து பின்னர் குளத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குளத்தில் வீசப்பட்ட மாதவியின் உடல் பாகங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.