Skip to main content

“யார் நீ... அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா” - மிஷ்கினை கடுமையாக விமர்சித்த அருள் தாஸ்

Published on 23/01/2025 | Edited on 23/01/2025
arul doss condemn mysskin for his speech

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2K லவ் ஸ்டோரி’. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, அருள் தாஸ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் இன்றைய இளைஞர்களின் வாழ்வை சொல்லும் கதையாக ரொமான்ஸ் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது அருள் தாஸ் பேசுகையில் படம் குறித்து பேசியதோடு பாட்டல் ராதா பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் முகம் சுளிக்கும் வகையில் பேசிய மிஷ்கின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அருள் தாஸ் பேசியதாவது, “பாட்டல் ராதா பட நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியது அநியாயமாக இருந்தது. அவ்வளவு ஆபாசமாக பேச தேவை இல்லை. இயக்குநர்னா என்ன வேணாலும் பேசலாமா. அவர் பேசியதை பார்த்தால் தலைகுனிவா இருக்கு. இந்திய சினிமாவுல தமிழ் சினிமாவும் தமிழ் சினிமா கலைஞர்களும் மதிக்கக்கூடிய இடத்துல இருக்காங்க. 

வெளியில என்ன வேணா பேசிக்கோங்க. ஆனால் மேடையில் இப்படி பேசலாமா. நிறைய புக் படிச்சிருக்கன்னு சொல்றீங்க, உலக சினிமா அதிகம் பார்த்ததா சொல்றீங்க. உங்களுக்கு என்ன அறிவு இருக்கு. எல்லாருக்கும் பெண் குழந்தை இருக்கு. அதனால் மேடை நாகரிகம் என்பது ரொம்ப முக்கியம். இதே போல நிறைய மேடையில அவர் பேசிட்டு வறார். சகட்டுமேனிக்கு எல்லாரையும் வாடா போடா என்கிறார். பாலா 25 விழாவில், அவன்தான் பாலா என்கிறார். அடுத்த மேடையில் இளையராஜாவை அவன்னு சொல்றார். யார்ரா நீ. தமிழ் சினிமாவுல அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா நீ” என கடுமையாக விமர்சித்த அவர், மிஸ்கினை போலி அறிவாளி என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “மிஷ்கின் அவர்களே நீங்க என்னை விட வயது குறைந்தவராக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கலாம். இல்லை என் வயதுடையவராக கூட இருக்கலாம். இது சினிமா. நீங்க ஒன்னும் ட்ரெண்ட் செட்டர் படம்லாம் பண்ணி ஜெயிக்கல. ஒரு சாதரண கதைகள், குத்தாட்ட பாடல்கள்... இதை வைத்து தான் ஜெயிச்சிருக்கீங்க. வெளிநாட்டு படம் மேல இருக்கிற மோகத்துல அதை காப்பி பண்ணி ஜெயிச்சிருக்கீங்க. அதனால் இனி பேசும் மேடைகளில் கொஞ்சம் நாகரிகமா பேசுங்க” என கேட்டுக் கொண்டார்.

சார்ந்த செய்திகள்