ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இது திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இது மிகவும் புகழ்பெற்றதாகும். திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கின்றன.
இந்த ஆண்டு சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விழா குழுவினரிடம் வழங்கினார். மேலும், திருச்சி பெரிய சூரியூரில் ரூ.3 கோடி செலவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அது அமையவுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான பணிகள் தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் கிராமத்தில் முதலமைச்சர் மினி விளையாட்டு அரங்கம் - ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கு பிப்ரவரி 04 மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தம் வழங்கி தளத்தை ஒப்படைத்த நாளிலிருந்து 270 நாட்களில் பணியை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.