ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு அதிமுக, பிஜு ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா கட்சி உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதா, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக கட்சியின் மூத்த தலைவர் அத்வானி மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதால் காஷ்மீர் விவகாரம் தொடர்பான அனைத்து மசோதாக்களும் எளிதில் நிறைவேற அதிக வாய்ப்பு உள்ளது.