மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தான் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு செல்ல அனுமதி அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காஷ்மீர் செல்ல சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும் சீதாராம் யெச்சூரி தனது கட்சியின் நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்களை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும், அரசியல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபாடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். நாட்டு மக்கள் காஷ்மீர் மக்களுடன் தொடர்பு கொள்வது அவசியம் என்றும், நாட்டு மக்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பாதை அமைத்து தருவது அரசின் கடமை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இருந்து 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடகங்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.