பாலக்காடு அருகே அரசுப் பேருந்தும் பள்ளி சுற்றுலா வாகனமும் மோதியதில் 9 மாணவ மாணவிகள் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் எர்ணாக்குளம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர். பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள், 2 ஊழியர்கள் என மொத்தம் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்து நள்ளிரவு பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது கொட்டாரக்கரையில் இருந்து கோவை நோக்கி சென்ற கேரள அரசுப் பேருந்தின் மீது மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்து மோதியது.
இதில் நிலை தடுமாறி சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 மாணவ மாணவிகள் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் இணைந்து மாணவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். சுற்றுலாப் பேருந்து அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.