உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது தொலைபேசி அழைப்புகளும், தனக்கு கட்சி தலைவர்களது தொலைபேசி அழைப்புகளும் உத்தரப்பிரதேச அரசால் ஒட்டுக்கேட்கப்படுகிறது எனப் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார்.
இந்தநிலையில் நேற்று இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி, "தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை விடுங்கள். அவர்கள் (உத்தரப்பிரதேச அரசு) எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்கிறார்கள். அரசுக்கு வேறு வேலை இல்லையா?" என்றார்.
பிரியங்கா காந்தியின் இந்த குற்றச்சாட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்,. பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டுத் தொடர்பாக தானாக முன்வந்து விசாரிக்கவுள்ளதாக அந்த அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரக்கால நடவடிக்கை குழு இந்த குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.