தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்காததே பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது தொடர்பாக தான் பேச விரும்புவதாகக் கூறி பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு வாட் வரியைக் குறைத்து, அதேபோல மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டன. ஆனால், மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம், தெலுங்கானா உள்ளிட்ட 7 மாநிலங்கள் தங்களுடைய மாநிலங்களில் வாட் வரியைக் குறைக்கவில்லை. முடிந்தால் உங்கள் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும். மத்திய அரசின் மீது பெட்ரோல், டீசல் விலையுயர்வு தொடர்பாக சில மாநிலங்கள் தொடர்ச்சியாக விமர்சனங்களை வைத்ததன் காரணமாகவே இந்தக் கருத்தை நான் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.