சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனில் ஆஜராவதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தங்களது ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்று குறிப்பிட்ட தேதியில் ஆஜராகியுள்ளனர்.
இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக நுங்கம்பாக்கம் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவீனாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை நடத்தினர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஜிஎஸ்டி துணை ஆணையரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான பாலமுருகன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், “சம்மன் அனுப்பப்பட்ட இரு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 450 ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளது. இரு விவசாயிகளும் அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகின்றனர். பாஜக பிரமுகருக்கும், சம்பந்தப்பட இரு விவசாயிகளுக்கும் இடையே நிலப்பிரச்சனை உள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பபட்டுள்ளது. சாதியை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு மத்திய நிதியமைச்சர் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.