இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 5 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே மணிப்பூரில் கலவரம் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஷ்னுபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், கலவரத்தில் குக்கி இன மக்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் கலவரத்தைத் தொடர்ந்து குக்கி இன மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், பீஷ்னுபூர் மாவட்டத்தில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.