முதன்முதலாக பொதுத்துறையைச் சார்ந்த ஐஆர்எப்சி நிதிச்சேவை நிறுவனம் பங்குச்சந்தையில் கால் பதிக்கிறது. இதையொட்டி, முதன்மை பங்கு விற்பனை எனப்படும் ஐபிஓ விற்பனை ஜன. 18- ஆம் தேதி தொடங்கியது. ஐபிஓ வெளியீட்டின் மூலம் மொத்தம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளது ஐஆர்எப்சி.
சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு லாட் சைஸ் 575 பங்குகளாகவும், ஒரு பங்கின் அதிகபட்ச விலை 26 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஜன. 20- ஆம் தேதியுடன் ஐஆர்எப்சி ஐபிஓவுக்கு விண்ணப்ப காலம் முடிந்தது. துறை சார்ந்த முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்கியது போக சில்லறை விற்பனைக்கு மொத்தம் 124 கோடி ஈக்விட்டி பங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 435 கோடி பங்குகளுக்கு விண்ணப்பம் குவிந்துள்ளது. 3.50 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
இதன்மூலம் ஐஆர்எப்சி ஐபிஓ வெற்றி அடைந்துள்ளதாக பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இம்மாத இறுதியில், குறிப்பாக ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாக சந்தையில் ஐஆர்எப்சி பங்குகள் பட்டியலிடப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறைக்குச் சாதகமான அம்சங்களைப் பொறுத்து, இந்தப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.