இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது தினசரி கரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை வரும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சத்தின் இணை செயலாளர் இணை செயலாளர் லாவ் அகர்வால், நாட்டில் நிலவி வரும் கரோனா நிலை குறித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர், நாட்டில் 71 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சதவீதம் 10க்கும் மேல் இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர், "வாராந்திர கரோனா உறுதியாகும் சதவீதம் 10க்கும் அதிகமாக இருக்கும் மாவட்டங்களையும், 60 சதவீதத்திற்கும் மேல் படுக்கைகள் நிரம்பியுள்ள மாவட்டங்களையும் கண்டறிந்து, அம்மாவட்டங்களில் கரோனா பரவல் சங்கிலியை உடைக்க குறைந்தது 14 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மத்திய அரசு மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும் லாவ் அகர்வால், இந்தியாவில் இதுவரை 34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது உலகிலேயே அதிகமான எண்ணிக்கை எனவும் கூறியுள்ளார்.