லஞ்சம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் ட்ரேஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் செயல்படும் ட்ரேஸ் அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லஞ்சம் எந்த அளவு கொடுக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அரசாங்கத்துடனான வணிக தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு தடுப்பு மற்றும் அமலாக்கம், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை மற்றும் சிவில் சமூக மேற்பார்வைக்கான திறன் ஆகிய நான்கு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அதிக லஞ்சப்புழக்கம் உள்ள நாடுகளின் பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 77வது இடத்தை பிடித்துள்ளது.
194 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இப்பட்டியலில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77வது இடத்தை பிடித்துள்ளது. இதில் சீனா 126வது இடத்திலும், பாகிஸ்தான் 153வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலின்படி, சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் லஞ்சம் குறைவாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலின்படி, அதிக லஞ்சப்புழக்கம் உள்ள நாடுகளாக வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தெற்கு சூடான், வெனிசூலா அதிக லஞ்ச ஆபத்துகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, லஞ்ச ஆபத்து மிகவும் குறைந்த நாடுகளாக டென்மார்க், நார்வே, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியா கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 78வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.