இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாக மிசோரம் மாநிலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலம் எது என்று நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி மேலாண்மை மூலோபாய நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ராஜேஷ் கே பில்லனியா தலைமையில், மார்ச் 2020 முதல் ஜூலை 2020 வரை இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாக மிசோரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடங்களை பஞ்சாப், அந்தமான் நிகோபார், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. ஒடிசா, உத்தரகாண்ட், சட்டீஸ்கர் ஆகியவை பட்டியலின் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
வேலை தொடர்பான சிக்கல்கள் இல்லாத மாநிலங்கள் என்ற அளவுருக்களின் அடிப்படையில், அசாம், பஞ்சாப், அந்தமான் நிக்கோபார் தீவுகள், மிசோரம் மற்றும் புதுச்சேரி ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. மகிழ்ச்சியான உறவுகளின் அடிப்படையில், மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், பஞ்சாப், கர்நாடகா, மற்றும் சிக்கிம் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. உடல் ஆரோக்கியம் அடிப்படையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, மிசோரம், பஞ்சாப் மற்றும் சிக்கிம் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
அதேபோல மற்றவர்களுக்கு உதவுவது என்ற அடிப்படையில், லடாக், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மிசோரம் ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளது. அதே சமயம் மத / ஆன்மீக நோக்குநிலையில், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லடாக் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. அதேபோல திருமணம் ஆகாதவர்களை விட திருமணம் ஆனவர்களே அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.