பொருளாதாரத்திலும், வேலையின்மையிலும், தொழில் வளர்ச்சியிலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் படுமோசமாக இந்தியா வீழ்ச்சியைச் சந்திக்கிறது. 2014ல் மோடி பிரதமராக பதவி ஏற்கும்போது உலக அளவில் இந்தியா பல்வேறு தளங்களில் பெற்றிருந்த இடங்களும், வளர்ச்சி விகிதமும் அடுத்தடுத்து தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
மோடியின் துக்ளக் நடவடிக்கைகளால் இந்தியா பின்னோக்கி செல்வதாக நிபுணர்கள் ஆதாரங்களுடன் சொன்னாலும், மக்கள் கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கைகளையே மோடி அரசு தொடர்கிறது. காஷ்மீரில் இன்னும் சகஜ நிலையை கொண்டுவர முடியவில்லை. காஷ்மீரின் வளர்ச்சிக்காகவே அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை பறித்து, மாநிலத்தை இரண்டாக பிரித்ததாக மோடியும், அமித்ஷாவும் கூறினார்கள்.
ஆனால், ஐந்து மாதங்களுக்குப் பின்னரும் காஷ்மீரை திறந்தவெளிச் சிறையாகவே பாஜக அரசு மாற்றி வைத்திருக்கிறது. அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் கூட இன்னும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார்கள்.
அதைப்பற்றி பேசுவதை தவிர்க்க குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை அரங்கேற்றினார்கள். பாஜக அரசின் நிர்வாக மோசடிகளை எப்படித்தான் மறைக்க முயன்றாலும், இந்தியா எல்லா வகையிலும் சரிவைச் சந்திப்பது அம்பலமாகியே வருகிறது.
2014- ஆம் ஆண்டு இந்தியாவின் ஜனநாயகத் தன்மை உலக அளவில் 27 ஆவது இடத்தில் இருந்தது. அது மோடி சொல்வதைப் போல மெல்ல மெல்ல வளர்ந்து 41 ஆவது இடத்துக்கு போயிருக்கிறது. இப்படித்தான் இருக்கிறது மோடி சொன்ன வளர்ச்சி. இது வளர்ச்சியல்ல, மிகப்பெரிய வீழ்ச்சி என்று மக்களுக்கு தெரியத்தான் செய்கிறது. ஆனால், மோடியின் நிர்வாகத்திறனற்ற ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பவர்கள்தான் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
2018ல் ஊழலில் 43 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2019ல் 41- ஆவது இடத்துக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.