
தமிழ்நாடு அரசு சட்டமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து முதல்வருக்கே மாற்றும் வகையில் குஜராத், தெலுங்கானா மற்றும் கர்நாடகா அரசுகளின் பல்கலைக்கழக சட்ட மசோதாக்கள் போலவே சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்து ஒருமனதாக நிறைவேற்றியது. அந்த சட்டத் திருத்தம் ஆளுநருடைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க ஆணையிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை 2023 ஆம் ஆண்டு அணுகியது.
இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்த்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி 2025 ஆம் ஆண்டு உடனடியாக சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்கும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத சூழலில், இன்று(08.04.2025) உச்சநீதிமன்றம் ஆளுநர், தமிழ்நாடு அரசு சட்டமன்ற மசோதாக்களை நிறுத்தி வைத்தது செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்ற சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப் பிரிவு 142 இன் படி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மனமார பாராட்டி உச்சநீதிமன்றத்திற்கும், நீதியரசர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாநில அரசின் வரலாறு, பண்பாடு, தொன்மை, கல்வி முன்னேற்றம், மாணவர்களின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து சட்டத் திருத்தம் கொண்டு வந்து, சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கக்கூடிய, தமிழ்நாடு முதலமைச்சருக்கும்,தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.