
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த கர்நாடகா அமைச்சர் தற்போது அந்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், சுத்தகுண்டேபல்யா பகுதியில் கடந்த 3ஆம் தேதி இரவில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த ஒரு நபர், அந்த பெண்களை தகாத முறையில் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார் இதில் அந்த பெண்கள், அலறி துடித்துள்ளனர். அதன் பிறகு, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. அதே சமயம் இந்த சம்பவம் குறித்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இங்கும் அங்கும் நடப்பது வழக்கமான ஒன்று தான். எந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அது சட்டத்தின்படி செய்யப்படும். ரோந்து பணிகளை அதிகரிக்க காவல் ஆணையருக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் பரமேஸ்வராவின் இந்த கருத்து, அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆணாதிக்க மனநிலையோடு அமைச்சர் பிரதிபலிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு அனைவரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று அமைச்சர் பரமேஸ்வரா வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். நான் நேற்று என்ன சொன்னேன் என்பதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. நான் எப்போதும் பெண்களின் பாதுகாப்பிற்காக இருக்கிறேன். எனது பதவிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டுள்ளது. நான் சொன்னதால் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் பெண்கள் யாராவது புண்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது பாஜகவுக்கோ அல்லது வேறு எந்த தளத்துக்கோ அனுப்பப்பட்ட அறிக்கை அல்ல; இதை நான் தனிப்பட்ட முறையில் சொல்கிறேன்” என்று கூறினார்.